உள்ளூர் செய்திகள்
டிசம்பர் 15ந்தேதிக்குள் பல்லடம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை கட்ட வேண்டும்-நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
நகராட்சியின் வளர்ச்சி பணிகள் பாதிப்படைந்துள்ளது. எனவே நிலுவையில் உள்ள வரியினங்களை தீவிரமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்லடம்:
டிச.15ந் தேதிக்குள் பல்லடம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை கட்ட வேண்டும் என நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் செய்தியாளரிடம் கூறியதாவது:-
பல்லடம் நகராட்சியில் 14,494 சொத்துவரி செலுத்துவோர் உள்ளனர். இதுவரை சொத்துவரி ரூ.3 கோடியே 50 லட்சம் நிலுவை உள்ளது. 12,322 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இவைகளின் மூலம் ரூ.2 கோடியே 50 லட்சம் கட்டணம் பாக்கியுள்ளது.
இதேபோல் காலியிடம், தொழில்வரி உள்ளிட்ட வரி இனங்கள் மூலம் மொத்தம் ரூ.11 கோடியே 92 லட்சம் வரி நிலுவையில் உள்ளது. இதனால் நகராட்சியின் வளர்ச்சி பணிகள் பாதிப்படைந்துள்ளது. எனவே நிலுவையில் உள்ள வரியினங்களை தீவிரமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரியினம் செலுத்தும் பொதுமக்கள் வரும் டிச.15ம் தேதிக்குள் செலுத்தி அபராதம் கட்டணத்தை தவிர்க்குமாறும் வளர்ச்சி பணிகளை செயல்படுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீரை கொதிக்க வைத்து ஆறிய பின்னர் தண்ணீரை அருந்த வேண்டும்.
தெருக்களில் குப்பைகளை திறந்த வெளியில் தூக்கி வீசக்கூடாது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்க வீதிகளுக்கு வரும் போது அவர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வழங்க வேண்டும்.
பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்க நகராட்சிக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.