செய்திகள்
கோப்புபடம்

பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5ஆயிரம் அபராதம்-திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

Published On 2021-11-28 08:16 GMT   |   Update On 2021-11-28 08:16 GMT
தமிழக அரசு சார்பில் கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மாவட்ட  கலெக்டர் வினீத்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு சார்பில் கொரோனா  நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடை கை கழுவுதல், கூட்டநெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றையும் அரசு ஊக்குவித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தெருக்கள், பொது இடங்கள், சந்தைகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஓய்வறைகள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் போன்ற இடங்களில் பணிபுரியும் தனிநபர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆகவே பொது சுகாதார துறையின் மூலம் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தாத பணியாளர்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

ஆகவே, அனைத்து வணிக நிறுவனங்களும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News