செய்திகள்
பணம் கொள்ளை

ஆம்பூர் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். உடைத்து பணம் கொள்ளை

Published On 2021-11-27 11:00 GMT   |   Update On 2021-11-27 11:00 GMT
ஆம்பூர் அருகே வாகன போக்குவரத்து இருக்கும் பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

ஏ.டி.எம். மையத்தில் நேற்று மாலை 3 மணிக்கு வங்கி ஊழியர்கள் பணத்தை நிரப்பி விட்டுச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை ஏ.டி.எம். வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்பூர் டி.எஸ்.பி. சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். மையத்திற்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டு, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

அதன் பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

ஏ.டி.எம். எந்திரத்தில் எவ்வளவு பணம் நிரப்பினர். அதில் எவ்வளவு பணம் கொள்ளை போனது என உடனடியாக தெரியவில்லை. போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்களா? அல்லது உள்ளூரை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும் பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News