செய்திகள்
ராமதாஸ்

இலங்கை தமிழர் சிக்கலுக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு- ராமதாஸ் டுவிட்டர் பதிவு

Published On 2021-11-27 08:13 GMT   |   Update On 2021-11-27 10:16 GMT
ஈழத்தமிழர் உரிமைப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை சாதகமானதாக மாற்றுவதே தமிழக மக்கள் முன்பாக உள்ள கடமை ஆகும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழீழ விடுதலைப் போரில் தமது இன்னுயிரை ஈந்த போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் மாவீரர் நாள் நவம்பர் 27-ல் நினைவு கூறப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் உயிர்த் தியாகம் செய்த முதல் போராளி லெப்டினன் சங்கர் வீரச்சாவடைந்த நாள் இதுவாகும்.

மாவீரர் நாளில் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் வீரத் தியாகிகளை நெஞ்சில் நிறுத்தி, மாவீரர் கனவை நனவாக்க உறுதியேற்கிறார்கள். தமிழீழம் என்கிற உயர்ந்த லட்சியத்துக்காக உலகிலுள்ள எல்லா தமிழர்களும் தத்தமது பங்கினை ஆற்ற உறுதியேற்கும் நாளாகவும் இந்த நாள் அமைகிறது.

“இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்” என்று தமது கடைசி (2008) மாவீரர் நாள் உரையில் மாவீரன் பிரபாகரன் தெரிவித்தார்.

ஈழத்தமிழர் உரிமைப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை சாதகமானதாக மாற்றுவதே தமிழக மக்கள் முன்பாக உள்ள கடமை ஆகும். போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்டக் களங்கள் மாறலாம்; ஆனால், தனித் தமிழீழம் மட்டும்தான் ஒரே தீர்வு. தமிழீழம் மலரும் நாள் விரைவில் அமைய பாடுபடுவோம்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடைமழையிலும் ஆவின் பால் தடையின்றி வினியோகம்

Tags:    

Similar News