செய்திகள்
கோப்புபடம்.

வியாபாரியை மிரட்டி கார், நகையை பறித்து சென்ற கொள்ளையர்கள் - 2மணிநேரத்தில் மீட்ட தனிப்படை போலீசார்

Published On 2021-11-17 17:07 IST   |   Update On 2021-11-17 17:07:00 IST
நான்கு பேர் சேகரிடம் காரை வாங்கிக்கொண்டு அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.
திருப்பூர்:

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மாமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 45). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார். 

இந்நிலையில் சேகரை வாலிபர் ஒருவர் தொடர்புகொண்டு தனக்கு கார் வேண்டும் குறைந்த விலையில் கார் இருக்கிறதா? என கேட்டுள்ளார். இதனையடுத்து சேகர் தன்னிடம் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கார் ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். 

உடனடியாக அந்த வாலிபர்  காரை எடுத்துக்கொண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தளி பகுதிக்கு வரும்படி கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சேகர் காரை எடுத்துக்கண்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தயாராக நின்ற நான்கு பேர் சேகரிடம் காரை வாங்கிக்கொண்டு அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சேகர் உடனடியாக திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மேலும் பக்கத்து மாவட்டமான கோவை மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து போலீசார் கடத்தல் கார் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த கார் பொள்ளாச்சி அருகே சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த காரை மடக்கி பிடித்து காரில் இருந்த 4 பேரையும் பிடித்தனர். பின்னர் தளி போலீசார் 4 பேரையும் திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராபின்ராஜ் (24), அருள்ராஜ் (28), சேவாக் (20), மரியாஅபின் (29) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்த கார் மற்றும் 4 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

கார் மற்றும் நகையை வழிப்பறி செய்த இரண்டு மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசாரை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். 
Tags:    

Similar News