செய்திகள்
தா.பழூரில் குளம்போல் தேங்கியுள்ள தண்ணீரை கடந்து மாணவ, மாணவிகள் சென்ற காட்சி.

தா.பழூரில் குளம்போல் தேங்கிய தண்ணீரால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதி

Published On 2021-11-17 10:10 GMT   |   Update On 2021-11-17 10:10 GMT
தா.பழூரில் குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீரை கடந்து செல்வதால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் மேலத்தெருவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இந்த தெருவை கடந்துதான் செல்ல வேண்டியது உள்ளது. இதனால் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

மேலும் தா.பழூர் பகுதிக்கான ரேஷன் கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மின்வாரிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் விஸ்வநாதர் கோவில் ஆகியவையும் இந்தப் பகுதியிலேயே உள்ளன. இதனால் அலுவலகங்கள் மற்றும் கோவிலுக்கு இந்த பாதையை கடந்து செல்லும்போது முதியவர்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.

மேலும் தண்ணீர் வடிவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் மேலத்தெருவில் உள்ள தார் சாலை சிதிலமடைந்து போக்குவரத்திற்கு பயன்பாடற்ற சாலையாக மாறிவிட்டது. குண்டும், குழியுமாக இருக்கும் இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்று அச்சத்தால் பிள்ளைகளை பெற்றோர்கள் தயக்கத்துடனேயே பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில் பள்ளியின் அருகில் மழைநீர் தேங்கி, டெங்கு போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளதால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே பள்ளி செல்லும் பாதையில் நீர் தேங்காமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News