செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் - பொங்கலூரில் ஆபத்தான பள்ளங்களால் விபத்து அபாயம்

Published On 2021-11-17 06:15 GMT   |   Update On 2021-11-17 06:15 GMT
பொங்கலூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள குழியை மண் கொட்டி நிரப்ப முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவில், மணியகாரம்பாளையம் செல்லும் ரோட்டில் மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் குழி தோண்டி வடிகால் கட்டப்பட்டது. கட்டுமானப்பணி நிறைவடைந்த பின்னும் இதற்காக தோண்டிய குழி முறையாக மண் போட்டு மூடப்படவில்லை. 

இக்குழியில் பல இடங்களில் செடிகள் முளைத்து வளர்ந்து கிடக்கிறது. அண்மையில் பெய்த மழையில் சாலையில் பெருக்கெடுத்த மழைநீர் இந்த குழியில் தேங்கி நிற்கிறது. இதில் துர்நாற்றமும், கொசு உற்பத்தியும் ஏற்பட்டு  சுற்றுப்பகுதியினர் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் சில நேரங்களில் தடுமாறி விபத்துக்கு ஆளாகும் நிலையும் காணப்படுகிறது. 

எனவே வடிகால் கட்டுமானப் பணி நிறைவடைந்த பின் உடனுக்குடன் இது போன்ற குழிகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பொங்கலூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பி.வி.கே.என்., மேல்நிலைப்பள்ளிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பல மாணவர்கள் பஸ்சில் வருகின்றனர்.

பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பஸ்சில் இருந்து கீழே இறங்குவதற்கு அவதிப்படுகின்றனர். அவர்கள் சாலையில் நடந்து செல்லும் போது வாகனங்களில் செல்லும் சிலர் வேகமாக செல்வதால் சேறும் சகதியும் கலந்த தண்ணீர் சீருடைகளை நனைத்து விடும் அபாயம் உள்ளது.

எனவே நெடுஞ்சாலை துறையினர் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ் நிறுத்தம் அருகில் உள்ள குழியை மண் கொட்டி நிரப்ப முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News