செய்திகள்
எஸ்ஜி விநாயகமூர்த்தி

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. எஸ்.ஜி.விநாயகமூர்த்தி மரணம்

Published On 2021-11-16 12:45 IST   |   Update On 2021-11-16 12:45:00 IST
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. எஸ்.ஜி.விநாயகமூர்த்தி 1967 தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்திரா, ராஜீவ் ஆகியோரின் அன்பை பெற்றவர்.
சென்னை:

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. எஸ்.ஜி.விநாயக மூர்த்தி (92). வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது உடல் இன்று மாலையில் அம்பத்தூரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

அவரது மரண செய்தி அறிந்ததும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தணிகாசலம், ஜோதி, எஸ்.வி.ரமணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

92 வயதான எஸ்.ஜி. விநாயகமூர்த்தி சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். கல்லூரியில் படித்த போதே அரசியல் ஆர்வத்தில் காங்கிரசில் இணைந்தார். வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த விநாயக மூர்த்தி, காமராஜர், மூப்பனாருக்கு நெருக்கமானவர்.

1967 தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்திரா, ராஜீவ் ஆகியோரின் அன்பை பெற்றவர். 2 முறை மாநகராட்சி உறுப்பினராக இருந்தார்.

2001 தேர்தலில் பூங்கா நகர் தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை தொடங்கியதும் அவரிடம் இருந்த நெருக்கம் காரணமாக அந்த கட்சியில் சேர்ந்தார். பின்னர் ஜி.கே. வாசன் த.மா.கா. தொடங்கிய போதும் அங்கு சென்றார்.

மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. விநாயக மூர்த்திக்கு கனகராஜ், ரவி, ஜவகர் என்ற 3 மகன்கள், உதய குமாரி, ஜெயந்தி, ரேவதி ஆகிய 3 மகள்கள். இவர்களில் மகன் கனகராஜ், மகள் ரேவதி ஆகியோர் இறந்துவிட்டார்கள்.

Tags:    

Similar News