செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு மாற்றக்கூடாது- மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை

Published On 2021-11-14 10:28 GMT   |   Update On 2021-11-14 10:28 GMT
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மாற்றம் என்பது பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறி உள்ளனர்.
சென்னை:

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், சென்னை உயர்  நீதிமன்ற தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு மாற்றுவதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும் என சென்னை பார் அசோசியேஷன் மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்று 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மாற்றம் என்பது பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது எனவும், இந்த மாற்றம் என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News