செய்திகள்
கொரோனா வைரஸ்.

பல்லடம் பத்திர பதிவு அலுவலகத்தில் சமூக இடைவெளியின்றி குவியும் பொதுமக்கள் - கொரோனா பரவும் அபாயம்

Published On 2021-11-11 07:52 GMT   |   Update On 2021-11-11 07:52 GMT
மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதன்படி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 96 ஆயிரத்து 50 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 61 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 684 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை. 

கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 983 ஆக உள்ளது. தொடர்ந்து மாவட்டம்  முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஆனால் பல இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் குவிந்து வருகின்றனர்.  

பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சமூக இடைவெளி இல்லாததால் ‘கொரோனா நோய் தொற்று’ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டமாக கூடினர். அவர்களை பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் முறைப்படுத்தாமல் விட்டதால் அலுவலகத்தினுள் மற்றும் முன்புற வாயில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டனர். மேலும் அலுவலகத்திற்குள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பானோர் ‘முககவசம்‘ அணியவில்லை.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பத்திரப் பதிவுக்கு ‘டோக்கன்’ முறை கொண்டுவரப்பட்டுள்ளது. டோக்கன் வைத்திருப்பவர்களை மட்டும் அலுவலகத்தினுள் அழைத்தால் போதும். ஆனால் பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை  அலுவலகத்திற்குள் வர அனுமதிக்கின்றனர். இதனால் அலுவலகத்தினுள் கூட்டம் கட்டுக்கடங்காமல் நிற்கிறது. 

கோடிக்கணக்கில் வருமானம் வரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் அமர வசதி செய்து தரவேண்டும். மேலும் பத்திரங்கள் டோக்கன் வரிசைப்படி முறையாக பதிவு செய்தால் இப்படிக் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைய வேண்டிய நிலை இருக்காது என்றனர். 
Tags:    

Similar News