செய்திகள்
முதல்வர் ஆய்வு கூட்டம்

மழை பாதிப்பு குறித்து மு.க. ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை

Published On 2021-11-11 07:23 GMT   |   Update On 2021-11-11 10:15 GMT
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளிடம் மழை பாதிப்பு குறித்து தொலைபேசியில் விவரங்களை கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நிவாரண நடவடிக்கைகளைக் கண்காணித்து, பணிகளைத் துரிதப்படுத்திட அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட அமைச்சர்களையும், மாவட்டங்களுக்கு சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாவட்டங்களில் மழை, வெள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுத்திட அறிவுறுத்திய முதல்- அமைச்சர், ஆங்காங்கே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்திடவும் உத்தரவிட்டார்.

மேலும், துறை அலுவலர்கள் பயிர் சேதங்களைத் தவிர்க்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக இன்று காலை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தில் மழை வெள்ள நிலை குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News