செய்திகள்
சஸ்பெண்டு

விருத்தாசலத்தில் ரேசன் அரிசி பதுக்கிய விற்பனையாளர் சஸ்பெண்டு

Published On 2021-10-30 10:26 IST   |   Update On 2021-10-30 10:26:00 IST
ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடைய ரேசன் கடை விற்பனையாளரை சஸ்பெண்டு செய்து சின்ன பண்டாரங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் உத்தரவிட்டார்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடோனில் ரேசன் அரிசி பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் விருத்தாசலம் அருகே உள்ள பெரிய கண்டியக்குப்பம் பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான குடோனில் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அந்த குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை இட்லி அரிசியாக புதுப்பித்து கடைகளுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கடலூர் குடிமை பொருள் புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த குடோனில் இருந்து 156 அரிசி மூட்டைகளையும், 58 கோதுமை மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை கடத்தி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் சித்திரை குப்பம் ரேசன் கடை விற்பனையாளரான சின்ன பண்டாரங்குப்பத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், விருத்தாசலத்தை சேர்ந்த கார்த்திகேயன், வேப்பூர் அருகே உள்ள மங்களூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரேசன் அரிசியை கடத்திவந்து பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடைய ரேசன் கடை விற்பனையாளர் ராதாகிருஷ்ணனை சஸ்பெண்டு செய்து சின்ன பண்டாரங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.

Similar News