செய்திகள்
நடமாடும் வாகனத்தை கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

பார்வை திறன் பரிசோதனை மேற்கொள்ள 6 குழுக்கள் அடங்கிய நடமாடும் வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2021-10-29 18:25 IST   |   Update On 2021-10-29 18:25:00 IST
கடலூர் மாவட்டத்தில் பார்வை திறன் பரிசோதனை மேற்கொள்ள 6 குழுக்கள் அடங்கிய நடமாடும் வாகனத்தை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
கடலூர்:

தேசிய சுகாதாரத்திட்டத்தின் கீழ் தேசிய மற்றும் மாநில பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து பார்வை திறன் குறைபாடு பற்றி பல கட்டமாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வு கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 34 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு கண் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்ய உள்ளனர்.

அவர்களில் எத்தனை பேருக்கு கண் புரை நோய் உள்ளது என கண்டறிந்து, அவர்களில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எந்த அளவுக்கு விழித்திரை பாதிப்பு இருக்கிறது என கண்டறியப்பட உள்ளது. பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு லேசர் மூலம் சிகிச்சை அளிப்பது அல்லது கண் உள் பகுதியில் ஊசி செலுத்தி சரி செய்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பரிசோதனை செய்வதற்காக 6 குழுக்கள் நடமாடும் வாகனத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடமாடும் வாகனத்தை நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக இந்த குழுவினர் கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதலப்பட்டு, பெரியகங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்த வாக்குச்சாவடிகளில் பரிசோதனை மேற்கொண்டு, அதில் எத்தனை பேருக்கு பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து பல கட்டங்களாக மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் இந்த பரிசோதனை நடக்க உள்ளது.

நிகழ்ச்சியில் மாநில பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குனர் சந்திரகுமார், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் திட்ட மேலாளர்கள் (கடலூர்) கேசவன், ரவிச்சந்திரன் மற்றும் கண் டாக்டர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News