செய்திகள்
சம்பங்கி பூக்களை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

சம்பங்கி பூக்களை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

Published On 2021-10-19 09:35 IST   |   Update On 2021-10-19 09:35:00 IST
சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளத்தை சேர்ந்த விவசாயிகள் 2 பேர் 1 டன் சம்பங்கி பூக்களை அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் கொட்டிவிட்டு சென்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அங்கு நேற்று சம்பங்கி பூ கிலோ ஒன்று ரூ.10-க்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளத்தை சேர்ந்த விவசாயிகள் 2 பேர் தாங்கள் மூட்டைகளாக கட்டி சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்த 1 டன் சம்பங்கி பூக்களை அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் குப்பையோடு குப்பையாக கொட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தோட்டத்தில் உள்ள பூக்களை கூலி கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்து பறித்து மூட்டைகளாக்கி சரக்கு வேனில் கொண்டு வந்தால், அதற்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றாலும் எங்களுக்கு எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை. எனவே மன வருத்தத்தோடுதான் இந்த பூக்களை குப்பையோடு குப்பையாக கொட்டுகிறோம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது,’ என்றனர்.

Similar News