செய்திகள்
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை உலா வந்த ஒற்றை யானை

ஆசனூர் அருகே இன்று காலை மலைப்பாதையில் உலா வந்த யானையால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2021-10-04 10:28 IST   |   Update On 2021-10-04 10:28:00 IST
ஆசனூர் அடுத்த அரேபாளையம் பிரிவில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் இன்று காலை ஒற்றை யானை வனத்தை விட்டு வெளியேறி சாலையில் உலா வந்தது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி,கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன.

இந்த அடர்ந்த வனப்பகுதியில் திண்டுகல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

ஆசனூர் வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது மலைப்பாதையில் உள்ள சாலையை கடந்து செல்வது வழக்கம். தற்போது வனப்பகுதியில் மழை பெய்து பசுமையாக இருக்கிறது.

இந்நிலையில் ஆசனூர் அடுத்த அரேபாளையம் பிரிவில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் இன்று காலை ஒற்றை யானை வனத்தை விட்டு வெளியேறி சாலையில் உலா வந்தது.

இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனத்தை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டனர். இதனால் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகனங்கள் புறப்பட்டு சென்றது.

Similar News