செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தேவாங்குகள் மற்றும் கைதான 2 பேருடன் போலீசார்.

மாந்திரீகம் செய்ய விளாத்திகுளத்திற்கு கடத்தி வரப்பட்ட தேவாங்குகள்- 2 பேர் கைது

Published On 2021-09-29 15:28 IST   |   Update On 2021-09-29 15:28:00 IST
தேவாங்கை ஊக்க மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துவதாகவும், அமெரிக்கா, ரஷியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் ஏக கிராக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விளாத்திகுளம்:

இரவில் இரை தேடும் சிறு பாலூட்டி விலங்கு தேவாங்கு. இது பெரும்பாலும் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் உள்ள மழைவளக்காடுகளில் உள்ள மரங்களுக்கு இடையே வாழ்ந்து வருகிறது.

இதன் ஒவ்வொரு பாகமும் மருத்துவத்துறையில் அதிக அளவில் பயன்படுகிறது என்று சொல்லப்பட்டு, அதிக அளவில் வேட்டையாடப்படுகிறது. தேவாங்கில் எடுக்கப்படும் எண்ணெய் தொழுநோயை போக்குவதாக கூறி, அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

தேவாங்கை ஊக்க மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துவதாகவும், அமெரிக்கா, ரஷியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் ஏக கிராக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், தேவாங்கு வேட்டையாடப்பட்டு வெளிநாடுகளுக்கு அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து விளாத்திகுளம் நோக்கி சென்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு கூண்டில் அழியும் விளிம்பில் உள்ள அரியவகை பாலூட்டி வகையை சேர்ந்த உயிரினமான 5 தேவாங்குகள் இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து வனவிலங்கை கடத்திய விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தை சேர்ந்த கனகராஜ் (வயது 22) மற்றும் வேம்பார் கிராமத்தை சேர்ந்த கொம்புத்துறை (40) ஆகியோரை கைது செய்தனர்

கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், 5 தேவாங்குகள் ஆகியவற்றை விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்,

விசாரணையில் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு மந்திரவாதிக்கு மாந்திரீகம் செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




Similar News