செய்திகள்
கோப்புபடம்

கண்டெய்னர் தட்டுப்பாட்டால் ஏற்றுமதி - இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கும் பின்னலாடை உற்பத்தியாளர்கள்

Published On 2021-09-29 12:38 IST   |   Update On 2021-09-29 12:38:00 IST
கன்டெய்னர் தட்டுப்பாட்டால் ஆர்டர் செய்த எந்திரங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஆடை தயாரிப்புக்காக அமெரிக்கா, ஐரோப்பா, தைவான், சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, தையல்  எந்திரம் உள்ளிட்ட எந்திரங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றன.

ஆடை உற்பத்தியாளர்களும், ஜாப்ஒர்க் துறையினரும் தங்களுக்கு தேவையான எந்திரங்களை நேரடியாக இறக்குமதி செய்தும், வர்த்தகர்கள் மூலமாகவும் பெறுகின்றன.

கொரோனாவுக்குப் பின் சர்வதேச அளவில் கன்டெய்னர் தட்டுப்பாடு, சரக்கு கப்பல் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆடை தயாரிப்புக்கான  எந்திரங்கள், ஆடைகளில் இணைக்கப்படும் அக்சசரீஸ்கள் இறக்குமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பின்னலாடை துறையினரும், எந்திர இறக்குமதியாளர்களும் தவிக்கின்றனர்.

இதுகுறித்து இறக்குமதி தையல் எந்திர வர்த்தகர் ஒருவர் கூறியதாவது:

70 சதவீதத்துக்கும் மேல் சீன தையல் எந்திரங்களே திருப்பூரில் பயன்படுத்தப்படுகின்றன. கப்பல் இயக்கம் பாதிப்பு, கன்டெய்னர் தட்டுப்பாட்டால் ஆர்டர் செய்த எந்திரங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் எந்திரங்களை வழங்க முடிவதில்லை. 

இதனால் திட்டமிட்டபடி ஆடை தயாரிக்க முடியாத நிலை பின்னலாடை துறையினருக்கு ஏற்படுகிறது. கன்டெய்னர் கட்டணம் உட்பட சரக்கு கப்பல் போக்குவரத்து கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வை ஆடை உற்பத்தியாளர்களே தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. எந்திர வர்த்தகர்களுக்கும், லாபம் இழப்பு ஏற்படுகிறது.  

கப்பல் இயக்கம் சீராகி, கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு நீங்கி போக்குவரத்து கட்டணங்கள் குறையும் வரை எந்திர இறக்குமதியில் இத்தகைய சிக்கல்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்றார்.   

Similar News