செய்திகள்
தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட காட்சி

ஆரணியில் குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2021-09-24 20:07 IST   |   Update On 2021-09-24 20:07:00 IST
ஆரணியில் குடியிருப்பு பகுதியில் ஒரு தனியார் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
ஆரணி:

ஆரணி சைதாப்பேட்டை கமண்டலநதி தெருவில் வசிப்பவர் ஜெகதீசன். இவர், தனக்கு சொந்தமான காலி இடத்தில் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்திடம் டவர் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் செய்தார். அங்கு, செல்போன் டவர் அமைக்கும் பணி அப்போதே தொடங்கி உள்ளனர். அதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பணியை கிடப்பில் போட்டனர்.

இந்தநிலையில் நேற்று செல்போன் டவர் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கினர். அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தருமன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பொதுமக்களிடமும், தனியார் செல்போன் டவர் அமைக்கும் நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதற்கு அப்பகுதி பொதுமக்கள் நீதிமன்றம் உத்தரவு பெற்று வந்தாலும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். இது, மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி. எனவே அங்கு செல்போன் டவர் அமைத்தால் சுற்று வட்டார மக்களுக்கு செல்போன் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு வகையான உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கருவுற்ற தாய்மார்களின் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கும் நிலை ஏற்படும்.

குழந்தைகள் ஊனமுற்றதாக இருக்கும். மலட்டுத்தன்மை ஏற்படும் என்பது உள்பட பல்வேறு காரணங்களை கூறி பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து கோஷம் எழுப்பினர். செல்போன் டவர் அமைக்கும் பணி நடக்காமல் சம்பந்தப்பட்டவர்களிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்ற பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News