செய்திகள்
ராஜசேகர ரெட்டி சிலை திருட்டு போனதை கண்டு அப்பகுதி கிராம மக்கள் பார்வையிட்ட போது எடுத்த படம்.

வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி சிலை திருட்டு

Published On 2021-09-24 16:53 IST   |   Update On 2021-09-24 16:53:00 IST
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகரரெட்டி சிலை திருட்டு சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேப்பனப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஓ.என். கொத்தூர் கிராமத்தில் 2 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சிலை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இரவு மர்மநபர்கள் மின்சாரத்தை துண்டித்து விட்டு ராஜசேகர ரெட்டியின் சிலை உடைத்து திருடி தப்பி சென்று விட்டனர்.

இன்று காலையில் அந்த வழியாக சென்ற கிராம மக்கள் ராஜசேகர ரெட்டியின் சிலை திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து குடிப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து குடிப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தகவல் அறிந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் திரண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ராஜசேகரரெட்டி சிலை திருட்டு சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News