செய்திகள்
குழந்தைகள் நந்தகுமார் அக்சயா மற்றும் 6 மாத குழந்தை.

3 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Published On 2021-09-24 04:01 GMT   |   Update On 2021-09-24 04:01 GMT
3 குழந்தைகளின் கழுத்தை சேலையால் நெரித்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:

வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 30), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கும் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஜீவிதாவுக்கும் (23) கடந்த 6½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அக்சயா (5), நந்தகுமார் (4) மற்றும் பெயரிடப்படாத 6 மாத ஆண்குழந்தை என்று 3 குழந்தைகள். தினேஷ் குடும்பத்துடன் சலவன்பேட்டை கச்சேரி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

தினேஷ் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும்போது மதுஅருந்திவிட்டு வருவதாகவும், அதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறால் ஜீவிதா கோபித்து விட்டு 3 குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஜீவிதா குழந்தைகளுடன் நேற்று காலை 8.30 மணியளவில் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இதற்கிடையே தினேஷ் காலை 7 மணிக்கு வேலைக்கு சென்று விட்டார்.

தாயார் கெஜலட்சுமி மாலை 5 மணியளவில் செல்போனில் ஜீவிதாவை தொடர்பு கொண்டுள்ளார். நீண்டநேரமாகியும் எடுத்து பேசவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக தனது மகன் ஜெகதீஸ்வரனை தொடர்பு கொண்டு விரைவாக அக்கா வீட்டிற்கு சென்று பார்க்கும்படி தெரிவித்தார். அதையடுத்து அவர் அங்கு சென்றார். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜெகதீஸ்வரன் கதவை வெகுநேரம் தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து அவர் ஜன்னல் வழியாக கதவின் உள்பக்க தாழ்பாளை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது, படுக்கையறையில் 6 மாத ஆண்குழந்தை உள்பட 3 குழந்தைகளும் பேச்சு மூச்சின்றி கிடந்தனர். அவர்களின் கழுத்தில் சேலை சுற்றப்பட்டிருந்தது. அதனை அகற்றி விட்டு ஜெகதீஸ்வரன் குழந்தைகளை தட்டி எழுப்பி பார்த்தார். 3 பேரும் சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஜீவிதா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அதிர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரன் கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து தாயார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப தகராறில் 3 குழந்தைகளையும் கொன்று விட்டு ஜீவிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News