முதல் மகனின் திருமணம் தடைப்பட்டு வந்ததால் வேதனை: சுடுகாட்டில் தாய்-தந்தை விஷம் குடித்து தற்கொலை
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50 இவரது மனைவி சாந்தாமணி (45), இவர்களுக்கு ராகவேந்திரன் (27) என்ற மகனும். சுரேந்திரன் (25) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
முதல் மகன் ராகவேந்திரன், அப்பகுதியில் சுவீட் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் சுரேந்திரன், திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இளைய மகன், திருப்பூரில் வேலை பார்த்த போது ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் முதல் மகன் ராகவேந்திரனுக்கு திருமண ஏற்பாடுகள் தள்ளிக் கொண்டே போனது. மேலும் அவருக்கு யாரும் பெண் கொடுக்க மறுத்ததால் முருகேசனும், சாந்தா மணியும் மன வேதனையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் முருகேசனும், அவரது மனைவி சாந்தாமணி இருவரும் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே இன்று காலை கீழ்குப்பம் பகுதியில் உள்ள சுடுகாடு வழியாக சிலர் சென்ற போது, முருகேசனும், சாந்தாமணியும் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கணவன்- மனைவி இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.