செய்திகள்
கோப்புபடம்

பெண்ணிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்த பிரபல கொள்ளையன் கைது

Published On 2021-09-19 09:25 GMT   |   Update On 2021-09-19 09:25 GMT
பெண்ணிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தூர்:

கோபி வேலுமணி நகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மனைவி சுந்தரி. பொன்னுசாமி ஏற்கனவே இறந்துவிட்டார். அதனால் அவர் தனியாக வசித்து வந்தார். இவருடைய வீட்டின் பின்புறம் குடியிருந்து வருபவர் கமலா. அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி கமலா வேலை முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், கொரோனா நிதி உதவி உங்களுக்கு வாங்கித்தருகிறேன் என்று கூறி, அவரை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற கமலா சுந்தரியிடமும் இதுபற்றி கூறினார்.

உடனே கமலாவை அழைத்து வந்த மர்ம நபர் சுந்தரியிடம் உங்களுக்கும், கொரோனா நிதி வாங்கித்தருகிறேன். அதற்கு போட்டோ எடுக்க வேண்டும். நகைகள் அணிந்திருந்தால் நிதி கிடைக்காது. அவைகளை கழற்றிவைத்துவிடுங்கள் என்று கூறினார்.

இதனால் சுந்தரி தான் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை கழற்றி கட்டிலில் தலையணைக்கு கீழே வைத்தார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் எனக்கு டீ கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். சுந்தரி டீ போட சமையல் கட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் டீயுடன் வந்தபோது மர்ம நபரை காணவில்லை. மேலும் தலையணைக்கு அடியில் வைத்திருந்த நகைகளையும் காணவில்லை. வந்தவர் நகையை அபேஸ் செய்துவிட்டு சென்றது தெரிந்தது.

இதுகுறித்து உடனே அவர் கோபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தார்கள்.

இந்தநிலையில் கோபி போலீசார் கரட்டடிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். அப்போது மோட்டார்சைக்கிளில் ஒருவர் வந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் திரும்பி செல்ல முயன்றார். இதனால் ஊஷாரான போலீசார் அவரை பிடித்து விசாரித்தார்கள். அதில் அவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 46) என்பதும், சுந்தரியிடம் நகையை அபேஸ் செய்தது அவர்தான் என்பதும் தெரிந்தது.

மேலும் விருதுநகர், கூகலூர், பேரூர், தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையங்களில் இவர் மீது பல கொள்ளை, திருட்டு வழக்குகள் இருக்கும் பிரபல கொள்ளையன் என்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணகுமாரை கைது செய்து அவரிடம் இருந்து 5 பவுன் நகையையும் பறிமுதல் செய்தார்கள்.

Tags:    

Similar News