செய்திகள்
கோப்புபடம்.

கடந்த மாதம் ரூ.9ஆயிரம் கோடிக்கு ஆடைகள் ஏற்றுமதி - திருப்பூர் உற்பத்தியாளர்கள் தகவல்

Published On 2021-09-18 14:34 IST   |   Update On 2021-09-18 14:34:00 IST
தற்போது கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்துள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில்,தொடக்கம் முதலே ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ஏறுமுகமாகவே பயணித்து வருகிறது.
திருப்பூர்:

கொரோனா தொற்றால் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவை சந்தித்தது. 2018-19ம் நிதியாண்டில் ரூ.1.12 லட்சம் கோடியாக இருந்த ஆடை ஏற்றுமதி, 2019-20ம் நிதியாண்டில் ரூ. 1.09 லட்சம் கோடியாக குறைந்தது. 

இதனால் திருப்பூர் உட்பட நாடு முழுவதும் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையினர் கவலை அடைந்தனர்.

தற்போது இரண்டாவது அலை ஓய்ந்துள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில், தொடக்கம் முதலே ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ஏறுமுகமாகவே பயணித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம்  ரூ.9,661.36 கோடி, மே மாதம் ரூ.8,108.48 கோடி, ஜூன் மாதம் ரூ.7,367.33 கோடி, ஜூலை மாதம் ரூ.10,347.10 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. ஆகஸ்டு மாதத்திலும் ஏற்றுமதி வர்த்தகத்தில் உயர்வு நிலை நீடித்துள்ளது. 

கடந்த 2019-20ம் நிதியா ண்டின் ஆகஸ்டு மாதத்தில் ரூ.8,093.60 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. இது நடப்பு நிதியாண்டில் ரூ.9,175.65 கோடியாக 13.41 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஐரோப்பா, அமெரிக்கா உட்பட உலகளாவிய நாடுகளில் ஆடை வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. இதனால், அந்த நாடுகளில் இருந்து திருப்பூர் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளதாக திருப்பூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

ஆனால் ஆடை தயாரிப்பை விரைவில் முடித்தாலும் கூட போதியளவு கன்டெய்னர் இல்லாததால், குறித்த காலத்துக்குள் வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே மத்திய அரசு, கன்டெய்னர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Similar News