செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு பெற குவியும் மனுக்கள்

Published On 2021-09-18 08:26 GMT   |   Update On 2021-09-18 08:26 GMT
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை பெற அவிநாசி, திருமுருகன்பூண்டியில் 1,588 பேர் விண்ணப்பித்தனர்.
திருப்பூர்:

சமீப காலமாக பொதுமக்கள் பலர் குறைகேட்பு முகாம்களில் இலவச வீட்டு மனை மற்றும் குடியிருப்பு கேட்டு அதிகளவில் மனுக்களை அளித்து வருகின்றனர். அனைவருக்கும் வீடு திட்டத்தை மாநில அரசு முன்னெடுத்துள்ளது. 

குடியிருப்பு கேட்டு வரும் மனுக்களை உள்ளாட்சி அமைப்பு மூலம் பகுதிவாரியாக பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு (குடிசை மாற்று வாரியம்) அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக திருப்பூரில் நான்கு மண்டலங்களில் உள்ள 8 மையங்களில் இதற்கான மனுக்கள் பெற சிறப்பு முகாம் நடந்தது.  நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் மனுக்களை அளித்தனர். மனுக்கள் குடிசை மாற்று வாரியத்துக்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை பெற அவிநாசி, திருமுருகன்பூண்டியில் 1,588 பேர் விண்ணப்பித்தனர். அவிநாசி, போலீஸ்  நிலையம் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில்  2, 10,11,12,13 மற்றும் 14-வது வார்டு மக்களிடம் இருந்து மனு பெறப்பட்டது.

மொத்தம்  270 மனுக்கள் பெறப்பட்டன.தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற உதவினர். 

திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமில் பேரூராட்சிக்கு உட்பட்ட 4 முதல் 15 வார்டு வரையிலான மக்களிடம் இருந்து மனு பெறப்பட்டது. மொத்தம், 1,318 மனு பெறப்பட்டது. வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில்  453 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறினர். மீண்டும் விண்ணப்பம் 20 முதல் 24-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘விண்ணப்பங்களைத் தற்போது பெற்று வருகிறோம். இவ்வளவு பேருக்கும் குடியிருப்புகளில் இடம் ஒதுக்குவது என்பது இயலாதது. தகுதியுள்ள நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும். 

தகுதியுள்ளவர்கள் அதிகளவில் இருக்கும்போது புதிதாக குடியிருப்புகளை கட்டிய பின்பே அவர்களுக்கு ஒதுக்க முடியும். மேலும் வீடுகளை ஒதுக்கும் முன் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பயனாளிகள் வழங்க வேண்டியிருக்கும் என்றனர்.
Tags:    

Similar News