செய்திகள்
பலி

மகன்களுக்கு நீச்சல் கற்று கொடுத்த தந்தை ஆற்றில் மூழ்கி பலி

Published On 2021-09-17 06:51 GMT   |   Update On 2021-09-17 06:51 GMT
பவானி அருகே மகன்களுக்கு நீச்சல் கற்று கொடுத்த தந்தை ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பவானி:

பவானி அருகே உள்ள ஜம்பை துருசாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). எலக்ட்ரீசன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சக்திவேல் தனது மகன்களுக்கு நீச்சல் கற்றுத்தருவதற்காக பவானி அடுத்த தளவாய்பேட்டை வைரமங்கலம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்து சென்றார்.

தற்போது பவானிசாகர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சக்திவேல் மற்றும் அவரது மகன்கள் ஆற்றில் குளித்து விட்டு நீச்சல் கற்று கொண்டு இருந்தனர்.

அப்போது தண்ணீரில் சென்ற வாழை மரத்தைப் பிடிக்க சக்திவேல் முயன்றார். இதில் அவர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்ட அவரது மகன்கள் கதறி அழுதனர்.

அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் சென்று பார்த்தனர். அங்கு சக்திவேல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பொதுமக்கள் ஆற்றின் கரையோரப் பகுதியில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நீரேற்று நிலையம் பகுதியில் சக்திவேல் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News