செய்திகள்
திருட்டு

தேவகோட்டையில் வீட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

Published On 2021-09-08 17:40 GMT   |   Update On 2021-09-08 17:40 GMT
தேவகோட்டையில் வீட்டை உடைத்து பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகர் வளர்ந்து வரும் பகுதியாகும். அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் அதிக அளவிலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வேலை செய்பவர்களும் இந்தப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

ராம்நகர், தில்லைநகர் முதல் வீதியில் சசிகுமார் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் திருவாடானை அருகே உள்ள அரநூற்றுவயல் கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சசிகுமார் ஆண்டாவூரணியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 ஜோடி வெள்ளி கொலுசுகளும், ரூ. 20 ஆயிரமும் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ரமேஷ், ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

சிவகங்கை கைரேகை நிபுணர் குழுவினர் வீட்டில் தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு குறித்து தேவகோட்டை ஆறாவயல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம்நகர் பகுதியில் அதிக அளவில் அரசு அதிகாரிகள் வசித்து வருவதால் பகல் நேரங்களில் வீடுகள் பூட்டியே கிடக்கும். இதனை பயன்படுத்தி பகல் நேரத்தில் வீட்டை உடைத்து கொள்ளையர்கள் பொருட்களை திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அதிகாரிகள் அதிக அளவில் வசித்து வரும் இந்தப்பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமிராக்கள் வைக்க அப்பகுதி மக்களை கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News