செய்திகள்
விசாரணை

கொடநாடு வழக்கில் முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைப்பு

Published On 2021-09-04 03:03 GMT   |   Update On 2021-09-04 03:03 GMT
ஒவ்வொரு தனிப்படையிலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட தலா 5 பேர் என மொத்தம் 25 போலீசார் இடம்பெற்று உள்ளனர்.
ஊட்டி:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான உண்மைகளை வெளியே கொண்டு வர காவல்துறை மூலம் முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஊட்டி கோர்ட்டு 4 வார கால அவகாசம் வழங்கியதை தொடர்ந்து, போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். நேற்று முன்தினம் கொடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சேர்க்கப்பட்ட முக்கிய சாட்சிகள் மற்றும் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர்.

இதுதொடர்பாக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது யார், யாரிடம் விசாரணை நடத்துவது, தற்போது யாரிடம் விசாரணை நடந்து வருகிறது, வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முழு விசாரணை நடத்த மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு தனிப்படையிலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட தலா 5 பேர் என மொத்தம் 25 போலீசார் இடம்பெற்று உள்ளனர்.

ஏற்கனவே வழக்கில் கைதான 10 பேர் மற்றும் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்த இருக்கின்றனர். மேலும் 5 தனிப்படைகளும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ள உள்ளன. போலீசார் தொடர்ந்து ஒரு மாதம் விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர்.

இந்த நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் நடராஜனிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடராஜனின் வக்கீல் ராஜ்குமார் உடனிருந்தார்.

காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை என 2½ மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு, மேலாளர் நடராஜன் வாக்குமூலம் அளித்தார். பங்களாவுக்கு வந்து செல்லும் முக்கிய நபர்கள், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா தங்கும் அறைகள் குறித்து கூறியதாக தெரிகிறது. மேலும் சில முக்கிய தகவல்களையும் அந்த ரகசிய வாக்குமூலத்தில் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News