செய்திகள்
தமிழ் இலக்கண வகுப்பு நடத்திய கலெக்டர் மதுசூதன் ரெட்டி

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் இலக்கணம் கற்பித்த சிவகங்கை கலெக்டர்

Published On 2021-09-02 09:12 IST   |   Update On 2021-09-02 09:12:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் நகராட்சி பள்ளிகள் சேர்த்து மொத்தம் 294 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை:

9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்துவர வேண்டும். வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்தது. இந்த விதிகள் சரிவர பின்பற்றப்படுகிறதா? என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் சிவகங்கை மருது பாண்டியர் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற போது, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகுப்பறையில் தமிழ்ப்பாடம் கற்பிக்கப்பட்டது.

உடனே அந்த வகுப்பறைக்கு சென்ற கலெக்டர், மாணவர்களுக்கு தமிழ் இலக்கணம் வகுப்பெடுத்தார். அத்துடன் மாணவி ஒருவரை அழைத்து கேள்வி கேட்டு விளக்கம் அளித்தார். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், நேர்முக உதவியாளர் மகேந்திரன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

பின்னர் கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் நகராட்சி பள்ளிகள் சேர்த்து மொத்தம் 294 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 5,443 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதேபோல் விடுதி மாணவ-மாணவிகளுக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News