செய்திகள்
நீதிமன்றம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- ஊட்டி கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை

Published On 2021-09-01 09:38 IST   |   Update On 2021-09-01 09:38:00 IST
தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சயான் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு மனு அனுப்பி உள்ளார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி கொலை செய்யப்பட்டு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வழக்கு தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே நீதிமன்ற அனுமதி பெற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமையிலான போலீசார் கடந்த 17-ந்தேதி சயானிடம் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதேபோல் விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரித்தனர்.

தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக கோத்தகரி, கொடநாடு, கூடலூர் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.க்கள் ஆகியோரிடம் 2 நாட்கள் ரகசிய விசாரணை நடத்தினர். இதுதவிர மேலும் சிலரிடமும் தொடர்ந்து ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமினில் ஊட்டியில் தங்கி இருக்கும் சயான், போலீசாரிடம் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக தான் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.



எனவே எனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு மனு அனுப்பி உள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு எந்தவித போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு மறு விசாரணைக்காக நாளை ஊட்டி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. நாளைய தினம் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், 4-ந் தேதி மின்வாரிய உதவி பொறியாளர் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar News