வேதாரண்யத்தில் பிரபல ஆட்டோ திருடன் கைது
வேதாரண்யம்:
வேதாரண்யம் ரெயிலடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). இவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ உள்ளது. இவர் தற்போது சென்னையில் வேலை பார்த்து வருகிறார். அதன் காரணமாக தனது ஆட்டோவை வேதாரண்யம் சன்னதி தெருவில் உள்ள மயில்வாகனம் (37) என்பவருக்கு தினசரி ரூ. 180 வாடகைக்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.
இந்த நிலையில் மயில்வாகணன் ஆட்டோவை கீழ வீதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப் அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும்போது ஆட்டோவை காணவில்லை.
இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துவிட்டு சென்னையிலுள்ள ஆட்டோ உரிமையாளர் கார்த்திக் என்பவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். கார்த்திக் சென்னையில் இருந்தபடி தன் பேஸ்புக்கில் அனைத்து நண்பர்களுக்கும் ஆட்டோ சங்கத்திற்கும் தகவல் அனுப்பி உள்ளார். இதைப்பார்த்த திருச்சி துவாக்குடி ஆட்டோ நண்பர்கள் துவாக்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கார்த்திக் கொடுத்த தகவலின்படி உள்ள ஆட்டோ நிற்பதாக தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.
இது குறித்து கார்த்திக் வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் துவாக்குடி காவல் நிலையத்திற்கு தெரிவித்துவிட்டு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் துவாக்குடி விரைந்துள்ளார். துவாக்குடி போலீசாரும் ஆட்டோ நண்பர்களும் பிடித்து வைத்து இருந்த ஆட்டோவை சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் கைப்பற்றி வேதாரண்யம் கொண்டுவந்து வழக்கு பதிவு செய்து திருக்குவளை பகுதி பாங்கல் கிராமத்தை சேர்ந்த மணிவேல் (வயது 27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேற்கண்ட மணிவேல் பல்வேறு வாகனத் திருட்டில் சம்பந்தப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.