செய்திகள்
வேலூர் அடுத்த புதுவசூரில் கொள்ளை நடந்த வீட்டில் பீரோ திறந்து கிடந்த காட்சி.

வேலூர் புது வசூரில் தனியார் ஆஸ்பத்திரி மேலாளர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை

Published On 2021-08-21 06:21 GMT   |   Update On 2021-08-21 06:21 GMT
திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி புது வசூர் கே.ஜி.என் நகரை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 38). வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவிதா திருவண்ணாமலையில் தங்கியிருந்து டவுன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் கவிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் விஜயராகவன் வீட்டை பூட்டிவிட்டு கவிதாவை பார்ப்பதற்காக திருவண்ணாமலைக்குச் சென்று விட்டார்.

இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 36 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். விஜயராகவன் வீட்டு கதவு திறந்து கிடந்தது கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். விஜயராகவன் வந்து பார்த்தபோது வீட்டிலிருந்து நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுபற்றி வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. அதில் 2 பேரின் கைரேகைகள் அவரது வீட்டிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்ளையர்கள் 2 பேர் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்களை விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

சத்துவாச்சாரி பகுதியில் கடந்த சில நாட்களாக பூட்டிய வீடுகளில் கொள்ளை நடப்பது தொடர்கதையாக உள்ளது. மேலும் செயின் பறிப்பு, பைக் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Tags:    

Similar News