செய்திகள்
சத்யராஜ்

குடியாத்தத்தில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்

Published On 2021-08-19 15:03 IST   |   Update On 2021-08-19 15:03:00 IST
குடியாத்தத்தில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேரணாம்பட்டு:

வேலூர் மாவட்டம் மேல்பட்டி அருகே உள்ள மேல்கொத்தகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 72). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இருவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.

கடந்த 13-ந்தேதி ராஜேந்திரனுக்கும் மோகனின் மகன் சிவராமன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சிவராமன் தாக்கியதில் காயமடைந்த ராஜேந்திரன் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே சிவராமனுக்கு சொந்தமான மாட்டுக்கொட்டகை தீயில் எரிந்து நாசமானது. ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (31) என்பவர் தீ வைத்ததால் மாட்டுக் கொட்டகை எரிந்துவிட்டதாக சிவராமன் மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சிவராமன் அவரது மனைவி விஷ்ணு பிரியா மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சத்யராஜ் அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

மேலும் கத்தியால் சிவராமன் மற்றும் அவருடைய மனைவியை வெட்டினார். இதில் படுகாயமடைந்த இருவரும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பாக மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யராஜை நேற்று கைது செய்தனர். அவரை குடியாத்தம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடு செய்தனர்.

மேல்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன், காவலர்கள் பாலாஜி, ஜலாலுதீன் ஆகியோர் சத்யராஜை நேற்று இரவு குடியாத்தம் நீதிபதி குடியிருப்பில் உள்ள நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது சத்யராஜ் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் குடியாத்தத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சத்யராஜை தேடி வருகின்றனர்.

Similar News