செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள்? பழனிசாமி

Published On 2021-08-16 13:20 IST   |   Update On 2021-08-16 13:20:00 IST
தேர்தல் நேரத்தில் ஒரு கருத்தும், தேர்தல் முடிந்த பிறகு ஒரு கருத்துமாக திமுக கூறி வருகிறது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை:

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்துகொண்டு இருந்த போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சுக்கு அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் அளித்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விரிவாக விளக்கம் அளித்தார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு பேசியதாவது:-

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவோம் என்றீர்கள். ஏதோ கணக்குக்காக ஒரு சிலருக்கு கொடுத்துவிட்டு நிறுத்தி விட்டீர்கள். முழுமையாக யாருக்கும் கொடுக்கவில்லை. இப்போது 2021-ல் தி.மு.க. வாக்குறுதியில் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் தோறும் ரூ.1000 கொடுப்பதாக அறிவித்திருந்தீர்கள்.

ஆனால் இப்போது ஏழ்மையான குடும்பத்தலைவிகளுக்கு கொடுக்க இருப்பதுபோல் பேச்சுக்கள் வருகிறது. தேர்தல் நேரத்தில் ஒரு கருத்தும், தேர்தல் முடிந்த பிறகு ஒரு கருத்துமாக கூறி வருகிறீர்கள்.


இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு உடனே அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

அதன்பிறகு சத்துணவு திட்டம் தொடர்பான பிரச்சினை பற்றி பேசப்பட்டது. சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தது யார்? என்பது பற்றியும் பேசினார்கள். இதற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளிக்கையில், ‘சத்துணவு திட்டம் கொண்டுவந்ததில் ஏழெட்டு பேருக்கு பங்கு இருக்கிறது. எல்லோரையும் பாராட்டுகிறேன்’ என்றார்.

இதையும் படியுங்கள்...பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி - தமிழக அரசு ஆலோசனை

Similar News