செய்திகள்
அகரம்சீகூர் பள்ளியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம்

அகரம்சீகூரில் விளையாட்டு மைதானத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி சீரமைக்க கோரிக்கை

Published On 2021-08-11 15:20 IST   |   Update On 2021-08-11 15:20:00 IST
அகரம்சீகூரில் விளையாட்டு மைதானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் சீகூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டன.

இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் அகற்றப்படவில்லை.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், இந்த விளையாட்டு மைதானத்தில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் விளையாடி வருகின்றனர். அவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த இந்த மைதானம் உதவியாக உள்ளது. இந்த மைதானத்தில் ஆரம்ப காலங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் விளையாட்டு மைதானத்தில் வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மைதான பகுதி சுருங்கியுள்ளது. மேலும் இந்த மைதானத்தில் இருந்த பல்வேறு விளையாட்டு உபகரணங்களை காணவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக, மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுற்றுச்சுவர் அமைத்து விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டால் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் விளையாட்டு திறன் மேம்பாடு அடையும், என்று கூறினர்.

Similar News