செய்திகள்
மரக்கன்றை நடும் முதலமைச்சர் முக ஸ்டாலின்

1 லட்சம் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2021-08-07 06:10 GMT   |   Update On 2021-08-07 10:37 GMT
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் 3 மாதங்களுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட இருக்கின்றன.
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அவரது நினைவாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தலமரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் ஒரு லட்சம் தலமரக் கன்றுகள் நடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 1 லட்சம் தலமரக் கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து நாகலிங்க மரக்கன்று ஒன்றை நட்டார்.

இந்த திட்டத்தின்படி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அந்தந்த கோவில்களுக்குரிய தல விருட்ச மரங்கள் நடப்படுகின்றன.
கோவில் தோன்றுவதற்கு முன்பே இருப்பதால் அம்மரம் தலமரம் என்று போற்றப்படுகிறது.

கோவில்களில் அந்தந்த தல மரங்களான மா மரம், புன்னை மரம், வில்வ மரம், செண்பகம் மரம், மருதம் மரம் போன்ற பல்வேறு வகையான தல விருட்ச மரக்கன்றுகள் இந்த திட்டத்தின் மூலம் நடப்படுகின்றன.

பல கோவில்களில் தல விருட்ச மரங்கள் இருந்தாலும் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளன. எனவே அதுபோன்ற கோவில்களிலும் தலவிருட்ச மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன.

பெருமைமிகுந்த தல மரங்களை போற்றி பாதுகாக்கும் நோக்கத்தில் கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த மரக்கன்றுகள் நடப்படுகின்றன.



கோவில் வளாகங்கள் மற்றும் கோவிலின் முகப்புகளில் இந்த தல விருட்ச மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

3 மாதங்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, கே.என்.நேரு, எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News