செய்திகள்
கோப்புபடம்

காவேரிப்பாக்கத்தில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை

Published On 2021-08-06 12:05 GMT   |   Update On 2021-08-06 12:05 GMT
காவேரிப்பாக்கத்தில் தரமான அரிசி வழங்கக்கோரி பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம் பஜார் வீதியில் கற்பகம் கூட்டுறவு ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் இயங்கி வருகின்றன. இதில் கவரைத்தெரு, கோட்டைத்தெரு, செங்கட்டான் தெரு, ஓச்சேரி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களை சேர்ந்த 460 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று பொது மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. அப்போது தரமில்லாத அரிசி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பொது மக்கள் விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சரியான தகவல் தெரிவிக்காத காரணத்தால் பொது மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில் வாரத்தில் மூன்று நாட்கள் திறக்க வேண்டிய கடை ஒருநாள் மட்டுமே திறக்கப்படுகிறது. அரிசி வழங்கும் போது குறைவாகவும், தரமில்லாத அரிசியும் வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களாக பருப்பு வழங்கவில்லை. மண்எண்ணெய் ஒரு லிட்டருக்கு அரை லிட்டர் வழங்கப்படுகிறது. 5 கிலோ மூக்கடலைக்கு ஒரு கிலோதான் வழங்கபடுகிறது என புகார் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கவும், வாரத்தில் மூன்று நாட்கள் கடை திறக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News