செய்திகள்
கோப்புபடம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தினமும் 8,000 பேருக்கு கொரோனா‌ தடுப்பூசி போட கலெக்டர் உத்தரவு

Published On 2021-08-05 10:55 GMT   |   Update On 2021-08-05 10:55 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தினமும் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர்கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக போடுதல், தடுப்பூசி முகாம்களை அதிகரித்து அதிகப்படியான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சி, 7 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மற்றும் 9 பேரூராட்சி மூலமாகவும், சுகாதாரத்துறை மூலமாகவும் தினமும் மாவட்டம் முழுவதும் 80 தடுப்பூசி முகாம்கள் நடத்தி, சுமார் 8,000 பொதுமக்களுக்கு மேல் கொரோனா தடுப்பூசியை செலுத்திட நடவடிக்கை எடுக்க அனைத்துத் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 36 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலமாக பொதுமக்களுக்கு தினமும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேபோல அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும், தனியார் தொழில் நிறுவனங்களில் சமூக பங்களிப்பு நிதி உதவியுடன் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை செலுத்தும் பணியை விரிவுபடுத்த வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குனர், தொழிற்சாலைகளின் சமூக பாதுகாப்பு நிதி உதவி பெற்று தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும்.

முகாம்களுக்கு தேவையான செவிலியர்கள் மற்றும் வாகனங்கள், அதற்கான முன்னேற்பாடு பணிகளை மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் ஏற்படுத்தி இப்பணியினை வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News