செய்திகள்
டாஸ்மாக் குடோனில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

டாஸ்மாக் குடோனில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்

Published On 2021-08-04 09:19 GMT   |   Update On 2021-08-04 09:19 GMT
டாஸ்மாக் குடோனில் சம்பளம் கேட்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் அருகே சிப்காட் பகுதியில் குடிகாடு என்ற இடத்தில் கடலூர் மாவட்ட மொத்த டாஸ்மாக் குடோன் அமைந்துள்ளது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் லாரிகள் மூலம், இங்கு கொண்டு வந்து இறக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.

அதன் பின்னர் அங்கிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 148 சில்லரை மதுபான விற்பனை கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம். இங்கு மதுபான பெட்டிகளை லாரியில் இருந்து இறக்கவும், ஏற்றவும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வருகின்றனர்.

கடலூர் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் மூலமாக இரண்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் இப்பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் நேற்று திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சுப்புராயன் கண்டன உரையாற்றினார். தண்டபாணி, சுந்தர், மோகன், கோவிந்தன், சண்முகம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தால் டாஸ்மாக் குடோனில் மதுபானபாட்டில்கள் இறக்கும் மற்றும் ஏற்றும் பணிகள் பாதிப்படைந்தது. இதையடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News