ஆற்காடு அருகே கோவில் விழாவில் தகராறு- கண்டக்டர் கொலை
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 30). தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி மஞ்சுளா (24) இவர்களுக்கு சுதர்சன் (3) என்ற மகனும், டிசிகா என்ற மகளும் (2) உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் கிரிவாசன் (20) இவருக்கும் நாகேந்திரனுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பகுதியில் நெல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று திருவிழா நடந்தது. இதற்காக மேளதாளம் அமைத்து ஏற்பாடுகளை ஊர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதில் கலந்து கொள்வதற்காக கிரிவாசன் நண்பர்களான ராமநாதபுரம் மோட்டூர் பகுதியை சேர்ந்த அன்பரசன் (19), கேசவன் (19), ஹேமபிரசாத் (20), ஹரிஷ் (19) ஆகியோர் வந்தனர்.
சாமி ஊர்வலத்தில் நாகேந்திரன் வந்த போது இவருக்கும், கிரிவாசன் கூட்டாளிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
கிரிவாசன் வைத்திருந்த பீர் பாட்டிலால் நாகேந்திரனை தாக்கி கழுத்தில் குத்தினர். இதில் படுகாயமடைந்த நாகேந்திரனை ரத்தம் கொட்டிய நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து நாகேந்திரனின் மனைவி மஞ்சுளா ஆற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிரிவாசன் உள்பட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.