செய்திகள்
ரெயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள்.

அரக்கோணம் அருகே ரெயில் மறியலில் ஈடுபட்ட 200 பயணிகள் மீது வழக்கு

Published On 2021-07-27 03:48 GMT   |   Update On 2021-07-27 03:48 GMT
ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா பயணிகளையும், மாதாந்திர பயணச்சீட்டு பயணிகளையும் அனுமதிக்கக் கோரி அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்துக்கு அந்த ரெயில் வந்தபோது ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்:

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு தினமும் இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவில்லா பயணிகளுக்காக இருந்து வந்தது.

கொரோனா பொது முடக்கத்தால் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு பயணிகளுக்கான பெட்டியாக மாற்றப்பட்டது. இதில் மாதாந்திர பயண சீட்டு உள்ள பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த ரெயிலை அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வந்த நிலையில் மாதாந்திர பயணச்சீட்டு பயணிகள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் வேதனையில் இருந்தனர்.

இந்த ரெயிலுக்கு அன்வர்திகான்பேட்டையில் பயண சீட்டு தருவதும் இல்லை. இதனால் சென்னைக்கு தினமும் செல்ல வேண்டிய பலர் அரக்கோணம் வரை பஸ்சில் பயணம் செய்து அங்கிருந்து மின்சார ரெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா பயணிகளையும், மாதாந்திர பயணச்சீட்டு பயணிகளையும் அனுமதிக்கக் கோரி அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்துக்கு நேற்று அந்த ரெயில் வந்தபோது ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பிரச்சனை குறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த போராட்டத்தால் 7 ரெயில்கள் தாமதமானது.

இந்த போராட்டம் குறித்து சித்தேரி ரெயில் நிலைய அதிகாரி அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீசார் மறியலில் ஈடுபட்ட பயணிகள் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News