செய்திகள்
புது ஏரியில் உடைந்த மடையையும், மடைக்கற்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு கிடப்பதையும் படத்தில் காணலாம்.

புது ஏரியில் உடைந்த மடையை உடனடியாக சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்

Published On 2021-07-14 17:45 IST   |   Update On 2021-07-14 17:45:00 IST
குரும்பபாளையம் புது ஏரியில் உடைந்த மடையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து சாத்தனூர் குடிக்காடு செல்லும் சாலையின் வலதுபுறம் கருப்புடையார் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மேற்கு பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் புது ஏரி உள்ளது.

கருப்புடையார் ஏரி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கும், புது ஏரி பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த ஏரியில் நீர் தேங்குவதால் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கும் பயன்படுகிறது.

இந்த ஏரிக்கு குரும்பாபாளையம் கிராமத்தையொட்டி உள்ள காடுகளில் இருந்து வரும் தண்ணீரால், ஏரி நிரம்பும். அதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் புது ஏரி நிரம்பியது. இந்நிலையில் நீர் வழிந்தோடும் பகுதி சேதம் அடைந்து இருந்ததால், ஏரி நிரம்பி 2 நாட்களுக்குள் நீர் கொள்ளளவு தாங்காமல் கற்களால் கட்டப்பட்டு இருந்த நீர்வழிந்தோடும் பகுதியான மடை உடைந்தது. இதனால் 5 ஏக்கர் பரப்பில் தேங்கி இருந்த நீர் வெளியேறி மருதையாற்றில் கலந்தது. இதனால் தற்போது அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்காமலும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுவும் கொடுத்துள்ளனர். அதில், வருகிற மழைக்காலங்களுக்கு முன்பாக நீர் வழிந்தோடும் மடையை மீண்டும் அரசு உடனடியாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். புது ஏரிக்கு குறைந்த மழை பெய்தாலே நீர்வரத்து அதிகமாக இருக்கும். எனவே உடைந்த மடை பகுதியை உடனடியாக சரி செய்யாவிட்டால் அதிக நீர்வரத்தால் மண் அரிக்கப்பட்டு ஏரி இருந்த அடையாளமே தெரியாமல் போகும். மேலும் ஏரியை சீரமைக்க கூடுதல் செலவும் ஆகும், என்று கூறியிருந்தனர்.

Similar News