செய்திகள்
மீன்சுருட்டி அருகே கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து பணம் திருட்டு - மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை

மீன்சுருட்டி அருகே கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து பணம் திருட்டு - மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை

Published On 2021-07-10 17:20 IST   |   Update On 2021-07-10 17:20:00 IST
மீன்சுருட்டி அருகே கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போயுள்ளது. இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு பின் மர்மநபர்கள் மீண்டும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.


அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முத்துசேர்வாமடம் பெரிய தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில், ராமசாமி (வயது 50) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பூஜை முடிந்த பின்னர் இரவு 8 மணி அளவில் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் கோவிலின் முன்பு உள்ள கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு பின்னர் கிராம முக்கியஸ்தர்கள் கோவில் உண்டியலை திறந்து பார்க்கவில்லை. இதனால் கோவில் உண்டியலில் சுமார் ரூ.1 லட்சம் இருந்திருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த திருட்டு குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி, உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு இதே கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது மர்ம நபர்கள் மீண்டும் இந்த கோவிலில் கைவரிசையை காட்டியுள்ளனர்.

Similar News