செய்திகள்
கோப்புபடம்

கொரோனா ஊரடங்கால் மாசில்லாத மாவட்டமாக மாறிய நீலகிரி

Published On 2021-07-09 15:46 IST   |   Update On 2021-07-09 15:46:00 IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி:

பசுமையான காடுகளுடன் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகவும், ஏராளமான சுற்றுலா தலங்களையும் கொண்டதாக இருக்கிறது நீலகிரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும், பசுமையான காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக ஆண்டு தோறும் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

குறிப்பாக ஏப்ரல், மே போன்ற கோடை மாதங்களிலும், புத்தாண்டு உள்ளிட்ட காலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இதனால் நீலகிரி மாவட்டம் முழுவதுமே போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதன் காரணமாக காற்றின் மாசுபாடு அளவும் அதிகரிக்கும்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி மட்டுமன்றி குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே வாகன போக்குவரத்தும் கணிசமான அளவு குறைந்துள்ளதால் விபத்துக்கள் குறைந்துள்ளதோடு மாசு கட்டுப்படுத்தப்பட்டு தூய்மையான மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரியின் இயற்கை அழகை காண முடிவதாக உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

இந்த தகவல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஊட்டி ஆவின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றின் தர தொடர் கண்காணிப்பு நிலையம் மூலம் உறுதியாகி உள்ளது.

இந்த நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.1.5 கோடி செலவில் அமைக்கப்பட்டது. இங்கு காற்றின் தரம், மாசு அளவு தொடர்ந்து கணக்கிடப்படுகிறது. பொதுமக்களும் இதனை அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி மின்னணு தகவல் பலகையும் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கூறியதாவது:-

தமிழகத்தில் 35 காற்றின் தர தொடர் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையத்தில் தூசு, 10 மைக்ரான், 2.5 மைக்ரான், சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக் சைடு, அமோனியா, நைட்ரஜன் ஆக்சைடுகள், ஓசோன், சைலின், பென்சின், டொலுவின் ஆகிய 11 அளவுருக்கள் கண்காணிக்கப்படுகிறது.

காற்று உறிஞ்சப்பட்டு மாதிரிகள் ஆய்வு செய்த தகவல்கள் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். நீலகிரி மாவட்டத்தில் காற்றின் தரம் சிறப்பாக உள்ளது. காற்றின் தரக்குறியீடு 35 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. 50 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால் காற்று தரமானது. ஊரடங்கில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது.

ஊரடங்கு விலக்கப்பட்டால், மாசு சிறிது கூடும். இந்த கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படும் தரவுகள், காற்றின் தரத்தை ஆய்வு செய்ய பயன்படும். மேலும் எந்தெந்த செயல்பாடுகளை அனுமதிக்கலாம் என திட்டமிட உதவும். ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News