செய்திகள்
கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மாரிமுத்து

விக்கிரமங்கலம் அருகே அரசின் உதவித்தொகை பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

Published On 2021-07-08 15:29 IST   |   Update On 2021-07-08 15:29:00 IST
விக்கிரமங்கலம் அருகே அரசின் உதவித்தொகை பெற லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகனும், கல்லூரி மாணவருமான வசந்தகுமார்(வயது 22) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

முருகேசன் விவசாயி என்பதால், வசந்துக்கு தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.22,500-ஐ பெற்றுத் தருவதற்கு அவரது குடும்பத்தினர் கடம்பூர் கிராம நிர்வாக அதிகாரியான மாரிமுத்துவை(51) அணுகினர்.

அதற்கு கிராம நிர்வாக அதிகாரி, உதவித்தொகை பெற்றுத்தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத வசந்தின் உறவினரான அருள்ஜோதி (40) இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், அருள்ஜோதியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கொடுத்தனர். அந்த ரூபாய் நோட்டுக்களை கிராம நிர்வாக அதிகாரி மாரிமுத்துவிடம் அவரது சொந்த ஊரான சாத்தாம்பாடிக்கு சென்று அருள்ஜோதி கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையிலான போலீசார் மாரிமுத்துவை கையும்- களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News