செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஈரோட்டில் இன்று 113 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்

Published On 2021-07-03 22:07 IST   |   Update On 2021-07-03 22:07:00 IST
மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

ஈரோடு:

ஈரோட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் நள்ளிரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர். நள்ளிரவு ஒரு மணி முதல் வரிசையில் இடம் பிடித்து விடுகின்றனர்.

இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. முன்னதாக வழக்கம்போல் நேற்று இரவு முதலே தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் குவியத் தொடங்கிவிட்டனர். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக முந்தையநாள் இரவில் இருந்தே மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

இன்று மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் டோக்கன் அடிப்படையில் முதலில் வந்த 150 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.

இன்று மட்டும் மாவட்டம் முழுவதும் 15,170 கோவிஷீல்டு, 1500 கோவேக்சின் என மொத்தம் 16 ஆயிரத்து 670 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் கோவேக்சின் தடுப்பூசி மட்டும் 2-ம் டோஸ் போடப்பட்டது.

Similar News