செய்திகள்
கோப்புபடம்

சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு 40 நிமிடங்களில் கடந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்

Published On 2021-07-02 17:50 IST   |   Update On 2021-07-02 17:50:00 IST
70 கிலோ மீட்டர் தூரத்தை 40 நிமிடங்களில் கடந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள அங்கனங்கவுண்டன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி சவுமியா.

நிறைமாத கர்ப்பிணியான சவுமியாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது தாய் மற்றும் குழந்தை ஆகியோர் நலமுடன் இருந்தனர்.

இந்த நிலையில் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையின் இதயதுடிப்பு சரியாக இயங்கவில்லை என்றும் எனவே குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் குழந்தையின் உயிரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என கண்ணீருடன் பெற்றோர் இருந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையின் உதவியுடன் சத்தியமங்கலம் ரீலீப் டிரஸ்ட் ஆம்புலன்சு நிர்வாகத்தை குழந்தையின் பெற்றோர் தொடர்பு கொண்டனர். அவர்கள் குழந்தையை கோவைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தனர்.

ஆம்புலன்ஸ் டிரைவராக நவீன் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆம்புலன்ஸ் டிரைவர் நவீன் குழந்தை மற்றும் அவர்களின் பெற்றோரை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு கோவை புறப்பட்டார். டிரைவர் தனது உயிரை பணயம் வைத்து சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் உள்ள கோவை தனியார் மருத்துவமனைக்கு அதிவேகமாக ஆம்புலன்சை ஓட்டி சென்றார்.

சுமார் 40 நிமிடங்களில் குழந்தையை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உரிய நேரத்தில் குழந்தை மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டததால் தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 70 கிலோ மீட்டர் தூரத்தை 40 நிமிடங்களில் கடந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். 

Similar News