செய்திகள்
கோப்புபடம்

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2021-07-01 21:38 IST   |   Update On 2021-07-01 21:38:00 IST
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்:

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்மாணிக்கம், மக்கள் அதிகாரம் அமைப்பின் பேச்சாளர் காவேரி நாடான் என்கிற முத்துகுமார் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பெட்ரோல்-டீசல் விலை உயர்வையும், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வையும் மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் அல்லாத குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக 6 மாதம் தலா ரூ.7,500 வழங்கிட வேண்டும். உயிர் காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கிட வேண்டும். நபருக்கு 10 கிலோ வீதம் உணவு தாணியங்களை வழங்கிட வேண்டும். செங்கல்பட்டு நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல, அரியலூர் அண்ணா சிலை அருகே பெட்ேரால், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு கூடுதலான விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் தனகோடி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ராமநாதன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கியதாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், மாவட்ட குழு உறுப்பினர் பத்மாவதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் குன்னம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மாநில செயலாளர் வீரசெங்கோலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லத்துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், ராஜாபிள்ளை ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News