செய்திகள்
திருவண்ணாமலை அருகே வருவாய் ஆய்வாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
திருவண்ணாமலை அருகே வருவாய் ஆய்வாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 41), கிராம நிர்வாக அலுவலர். ஊசாம்பாடி ஏரிக்கரை பகுதியில் ரோட்டு ஓரம் சிலர் கொட்டகை போடுவதாக கிராம உதவியாளர்கள், ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வருவாய் ஆய்வாளர் சாயாஜிபேகத்துடன் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி கொட்டகை அமைப்பதற்காக நடப்பட்டு இருந்த கம்புகளை அகற்றி்னார்.
அப்போது அங்கிருந்த புதுமல்லவாடி கிராமத்தை சேர்ந்த ரகுநாதன் (43), சக்திவேல் (29) ஆகியோர் வருவாய் துறையினரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து கீழே கிடந்த கம்பால் தாக்கினர். மேலும் இதை தடுக்க வந்த வருவாய் ஆய்வாளரையும் அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுநாதன், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.