வேலூரில் 30 பேரின் ரத்த மாதிரி சேகரிப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பில் ஒரு நாள் உச்ச கட்டமாக 700 பேர் வரை பாதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்தது.
தற்போது கொரோனா 2-வது அலை பரவல் குறைந்து வருகிறது. கொரோனா 3-வது அலையின் தாக்கம் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
2-வது அலையால் பொதுமக்களின் உடலில் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்புத் திறனை அறிய ‘சீரோசர்விலன்ஸ்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.
இதற்கான பட்டியலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.சி.எம்.ஆர்.) மாவட்ட சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 30 இடங்களில் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதியில் முதல், 2-வது மண்டலங்களில் தலா 3 இடங்களிலும், 3-வது மண்டலத்தில் ஒரு இடத்திலும் பரிசோதனை செய்ய ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.
இதையொட்டி, மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரிடம் இருந்து ரத்த மாதிரி சேகரித்து வருகின்றனர். 30 இடங்களிலும் 30 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
அங்கு ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு பொதுமக்களின் நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியப்படும்.
முதற்கட்ட பரிசோதனையில் வேலூர் மாவட்டத்தில் நோய் எதிர்ப்புத் திறன் 33 சதவீதம் பேருக்கும், 2-வது கட்ட பரிசோதனையில் 32 சதவீதம் பேருக்கும் உருவாகியிருந்தது.
தற்போது 3-வது கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாள்கள் இந்த ரத்த மாதிரி சேகரிப்புப் பணி நடைபெறும்.
இந்த பரிசோதனை அடிப்படையில் மக்களின் நோய் எதிர்ப்பு திறன் அறியப்பட்டு 3-வது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என கணக்கீடு செய்யப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.