செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஹூண்டாய் ஆலையில் ஒரு கோடியாவது கார் அறிமுகம்

Published On 2021-06-30 13:07 IST   |   Update On 2021-06-30 13:07:00 IST
இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் தொழிற்சாலை அமைந்த பிறகு அதன் சுற்றுப்புற பகுதிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டு வருகிறது.
காஞ்சிபுரம்:

தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் இன்று முதல் முறையாக சின்ன காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வந்தார்.

அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் வீட்டில் உள்ள அவரது புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வழியெங்கிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அண்ணாவின் நினைவு இல்லம் அருகே கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கா.செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கா.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் புறப்பட்டு சென்றார். ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுகோட்டையில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலை 1996-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு 1999-ம் ஆண்டு முதல் கார்கள் உற்பத்தி தொடங்கியது. 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் தொழிற்சாலை அமைந்த பிறகு அதன் சுற்றுப்புற பகுதிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டு வருகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.



ஹூண்டாய் நிறுவனம் இதுவரை 11 வகையான கார்களை தயாரித்துள்ளது. சான்ட்ரோ, வெர்னா, ஐ10, ஐ20, ஆரா, வென்யூ, க்ரெட்டா, அல்கசார், எலன்ட்ரா, டக்சன், கோனா எலக்ட்ரிக் ஆகிய 11 வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 199 நாடுகளுக்கு ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஹூண்டாய் நிறுவனம் தொடங்கி 22 ஆண்டுகளில் இதுவரை 1 கோடி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது கார் அறிமுக விழா இருங்காட்டுகோட்டையில் உள்ள அதன் தொழிற்சாலை வளாகத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 கோடியாவது காரை அறிமுகப்படுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலின் ஹூண்டாய் நிறுவன தொழிற்சாலையை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஹூண்டாய் நிறுவன தலைவர் எய்சன் சங், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிற்சாலை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News